வான ராச்சியம் வந்தது
பல்லவி
வான இராச்சியம் வந் ததோ கோகோ!
மாந்தரே! தவம்செய்யும்; ஓகோகோ!
அனுபல்லவி
ஆன சாட்சி, தியான சூட்சி, மெய்ஞ்
ஞான காட்சியர், தோன்றினார். - வான
சரணங்கள்
1. மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்,
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே;
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை மேவினார்; உயர் உன்னதக் கிருபை ஆழமே! - வான
2. பிந்தி வந்தவர், முந்தி இருந்தவர்;
பேசரும் பொருளார், பரம்பர[1] நேசர், நம் கருணாம்பரர்,[2]
சுந்தரப் பரிபூரணர், காரணர்,
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில்[3] மேவினார் - வான
3. அண்ணலார் பாத ரட்கையின் வாரையே
அவிழ்க்க, வாய்மையில்[4] எடுக்க, அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்;
திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே;
தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார். - வான
4. மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது, பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்,
வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார் - வான
5. தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது;
துறையினில் தமதுரிய நற்களம் மற விளக்கி, அறுதியிலே
தோற்றக் கோதுமை கேயத்தில்[5] சேர்த்துமே
தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இந் நேரமே - வான
ராகம்: பைரவி
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] பரலோக
[2] கடவுள்
[3] பூமியில்
[4] வலிமையில்
[5] வீட்டில்