365. வருவார் விழித்திருங்கள்

வருவார் விழித்திருங்கள்

பல்லவி

வருவார் விழித்திருங்கள்;-இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்.

அனுபல்லவி

பெரியவர், சிறியவர், பேதையர், மேதையர்[1]
சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட.                                - வரு

சரணங்கள்

1. பேரிகையால் அண்டபித்திகளும்[2] குலுங்க,
பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க,
தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும்
சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திலங்க.                                                         - வரு

2. வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க,
ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க,
மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க,
ஞான கானம் பாட நல்லோர் சபை தொடங்க.                                                    - வரு

3. விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும்,
மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும்,
விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும்,
விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர்                                        - வரு


ராகம்: சௌராஷ்டிரம்
தாளம்: ஆதிதாம்
ஆசிரியர்: தேவவரம்

[1] புலவர்
[2] சுவர்கள்