364. வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே

பல்லவி

வரவேணும் பரனாவியே,
இரங்குஞ் சுடராய் மேவியே.

அனுபல்லவி

மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர, - வர

சரணங்கள்

1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம். - வர

2. என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும். - வர

3. குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைந்திடும்,
தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய, - வர


ராகம்: கரஹரப்பிரியை
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சந்தியாகு