மாட்சிமையான காட்சியைப் பார்க்கலாம்
பல்லவி
மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம்,
வா,-ஆ! கல்
வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற
மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம், வா
அனுபல்லவி
சூட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை
துய்யத்தை[1] நரர் மீறி - மகா
துர்க்குணப் பேயின் தந்திரத்தினால்
தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்;
சுத்த கிறிஸ்தரசன்,-தேவனுட
சித்தன், அமை சிரசன், மாந்தர்களின்
துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும்,
தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்கின்ற - மாட்
சரணங்கள்
1. எருசலை நகர் மருவுங் கல்வாரி
என்னப்பட்ட ஒரு மேடு;-அதில்
ஏசுக்கிறிஸ் தெனும் நேசமகத்துவன்
எங்களுக்காய்ப்படும் பாடு-மரக்
குருசில் ஏறியே சிரசில் முண்முடி
கொண்டதும் நொந்ததும் நீடு - அப்போ
கொற்றவன்[2] தன்முகம் சற்றேனுங் காட்டாத
குறையதும் ஒரு பீடு;
குருதி வடியவே, சுருதி முடியவே,
பருதி மறையவே, திரையுங் கிழியவே,
கொலைஞர் அவமதிக்க,-துஷ்டனாம்
அலகை[3] மனங்கொதிக்க, கசப்புடன்
கோனே, என்னை நீர் ஏனோ கைவிட்டீர்?
கொடுக்கிறேன் ஜீவனை, எடுத்திடு மென்றழும் - மாட்சி
2. பூலோகத்தாரே, இம்மேலான காட்சியின்
புண்ணியத்தை வந்து பாரும்;-தேவ
புத்திரன் பக்கத்தில் குத்துண்டு பாய்கின்ற
புனித ரத்தமும் நீரும்-நமை
மேலோகஞ் சேர்க்கின்ற சாலக்கிருபையின்
விஸ்தார ஊற்றென்று சேரும்;-அதில்
விழுந்து ஆத்துமம் முழுகிப் பாவந் தீ
வினை அகன்றிட வாரும்;
சீலமற்ற மாந்தர் கோல முற்ற வேந்தர்
ஜீவனாதிபதி சாவினாலே நம்மைத்
தெய்வ லோகஞ் சேர்க்க-நித்தியமாய்
உய்யும் சுத்தோராக்கத்-தேவசுதன்
செல்வக் கிறிஸ்தந்தக் கல்வாரி மேட்டினில்
ஜீவன் துடிக்கத்தம் ஆவி விடுகின்ற - மாட்சி
ராகம்: கேதாரகௌளம்
தாளம்: ஆதிதாளம்
[1] பரிசுத்தத்தை
[2] கடவுள்
[3] பேய்