பலிபீடத்தின் திருவருட்சாதனம் (சாக்கிரமெந்து)
குடும்பத்தலைவர் இவற்றை எளிய முறையில் தன் வீட்டாருக்கு எவ்விதம் கற்பிக்க வேண்டும்.
பலிபீடத்தின் திருவருட்சாதனம் என்பது என்ன?
பலிபிடத்தின் திருவருட்சாதனம் என்பது எமது இயேசு கிறிஸ்துவின் மெய்யான சரீரமும் இரத்தமுமாக இருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய எமக்கு உண்ணவும், குடிக்கவும் நம் ஆண்டவராகிய கிறிஸ்துவால் அப்பத்திலும் திராட்சை இரசத்திலும் கீழ் ஏற்படுத்தப்பட்டதாகும்.
இது எவ்விடத்தில் எழுதப்பட்டிருக்கிறது?
விடை:
தூய சுவிஷேசகர்களாகிய (மத்தேயு 26:26; மாற்;கு 14:22; லூக்கா 22:19) மற்றும் புனித பவுல் (1 கொரி. 11:24) எழுதுகிறதாவது:
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி அதைப்பிட்டு தம்முடைய சீஷருக்குக் கொடுத்து கூறியதாவது: ‘இதை வாங்கிப் புசியுங்கள். இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்”.
அவ்விதமாகவே அவர் போஜனம் பண்ணின பின்பு பாத்திரத்தையும் எடுத்து நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து கூறியதாவது: ‘நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதிலே பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்”.
இந்தப் புசித்தலிலும் குடித்தலிலும் உள்ள நன்மை என்ன?
விடை:
‘பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காக கொடுக்கப்பட்டதும், சிந்தப்பட்டதும்” என்னும் இவ்வார்த்தைகள் இந்த திருவருட்சாதனத்தில் பாவமன்னிப்பு, வாழ்வு மற்றும் இரட்சிப்பு என்பவை இவ்வார்த்தைகளின் மூலமாக அருளப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன. ஏனெனில்இ எங்கே பாவமன்னிப்பு இருக்கிறதோ அங்கே வாழ்வும் இரட்சிப்பும் இருக்கிறது.
சரீரப்பிரகாரமாக புசித்தலும் குடித்தலும் இவ்வளவு பெரிய காரியங்களை எவ்வாறு செய்கின்றன?
விடை:
புசிப்பதும் குடிப்பதும் இந்தக் காரியங்களை நிச்சயமாக செய்கிறதில்லை. ஆனால், இங்கே எழுதப்பட்ட வார்த்தைகளான ‘உங்களுடைய பாவ மன்னிப்புக்கென்று கொடுக்கப்பட்டதும் சிந்தப்பட்டதும்” என்பதுவே அதை நடப்பிக்கின்றன. சரீர ரீதியான புசித்தலிலும் குடித்தலிலும் சேர்ந்துள்ள இந்த வார்த்தைகளே திருவருட்சாதனத்தின் பிரதானமானவையாகவும், மையமாகவும் இருக்கின்றன. இந்த வார்த்தைகளை யாதொருவன் நம்புகின்றானோ அவன் அது குறிப்பிடும் பாவமன்னிப்பை உடையவனாகிறான்.
இந்தத் திருவருட்சாதனத்தை தகுதியுடையோனாய் பெற்றுக்கொள்கிறவன் யார்?
விடை:
உபவாசம் மற்றும் உடல் ஆயத்தம் முதலானவை நிச்சயமாக சிறந்த புறநிலை பயிற்சியாய் இருக்கின்றன. ஆனால், ‘பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காக கொடுக்கப்பட்டதும் சிந்தப்பட்டதும்’ என்னும் வார்த்தைகளில் நம்பிக்கையாய் இருப்பவனே உண்மையில் தகுதியுடையவனாயும் நல்லாயத்தம் உடையவனாயும் இருக்கிறான்.
ஆனால், ஒருவன் இவ்வார்த்தைகளை விசுவாசிக்காவிட்டால் அல்லது இவற்றை சந்தேகப்பட்டால் அவன் தகுதியற்றவனாயும் ஆயத்தமில்லாதவனாயும் இருக்கிறான். ஏனெனில், ‘உங்களுக்காக’ என்னும் வார்த்தையானது எல்லா இதயங்களும் விசுவாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதாயுள்ளது.