பாவ அறிக்கை
பாவ அறிக்கை செய்வதற்கு சாதாரண மக்கள் எப்படி வழிநடத்தப்பட வேண்டும்.
பாவ அறிக்கை என்பது என்ன?
விடை:
பாவ அறிக்கை இரு பகுதிகளைக் கொண்டது:
முதலாவது நாம் நமது பாவங்களை அறிக்கை செய்கிறோம். இரண்டாவது, நாம் பரத்திலிருக்கிற தேவனுக்கு முன் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற உறுதியான நம்பிக்கை கொண்டு, நாம் தேவனிடத்திலிருந்து பெறுவதுபோல சுவிசேஷத்தின் பிரசங்கியார் அல்லது பாவ மன்னிப்பு கேட்கும் குருவிடமிருந்து மன்னிப்பு அல்லது விடுதலையைப் பெறுகிறோம்.
நாம் எத்தகைய பாவங்களை அறிக்கையிட வேண்டும்?
விடை:
நமது பாவங்கள் நமக்கு தெரியாதிருந்தாலும் நாம் ஆண்டவருடைய ஜெபத்தில் செய்வது போல எல்லா பாவக் குற்றங்களுக்காகவும் மன்றாட வேண்டும். ஆனால் குருவின் முன்னால் நமக்குத் தெரிந்த, நம் உள்ளத்தில் உணருகிற பாவங்களை மட்டுமே அறிக்கையிட வேண்டும்.
அவைகள் யாவை?
விடை:
நீங்கள் ஒரு தந்தையா? தாயா? மகனா? மகளா? வீட்டுத்தலைவனா? வீட்டுத்தலைவியா? அல்;லது தொழிலாளியா? நீங்கள் கீழ்ப்படியாமலோ வாய்மையற்றவர்களாகவோ அல்லது சோம்பேறிகளாகவோ இருந்திருக்கிறீர்களா? உங்களுடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் யாரையாவது புண்படுத்தியிருக்கிறீர்களா? நீங்கள் திருடியிருக்கிறீர்களா? புறக்கணித்திருக்கிறீர்களா? ஏதேனும் பாழடித்திருக்கிறீர்களா? அல்லது யாருக்கும் ஏதாவது தீங்கிழைத்திருக்கிறீர்களா? என ஒவ்வொரு நபரும் பத்துக் கட்டளைகளுக்கேற்ப வாழ்க்கையின் நிலைமையை கருத்தில் கொள்ளவும்.
சாதாரண மக்களுக்கான பாவஅறிக்கையின் சுருக்கமான வடிவம்
பாவத்திற்காக வருந்துகிறவர் இவ்வாறு கூற வேண்டும்:
மரியாதைக்குரிய அன்பார்ந்த குருவே, தேவனின் சார்பாக, எனது பாவ அறிக்கைக்கு செவி சாய்த்து மன்னிப்பினை வழங்குமாறு மன்றாடுகிறேன்.
தொடர்க:
நான் அற்பமான பாவி, நான் அனைத்து பாவங்களுக்கான குற்றாளியென தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்கிறேன். விசேடமாக நான் ஒரு சேவையாளர், பணிப்பெண்.. ஆயினும், நான் எனது எஜமானனுக்கு விசுவாசமற்ற சேவை அளிப்பதை உமக்கு முன்பாக அறிக்கை செய்கிறேன்; நான் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டதற்கு ஏற்ப நான் செய்யவில்லை. நான் அவர்களை கோபமூட்டியிருக்கிறேன். சபிக்கவும் காரணமாயிருந்திருக்கிறேன். நான் பல விடயங்களை புறக்கணித்ததால் சேதம் விளைவதற்கு காரணமானேன். நான் என்னுடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் அவமானப்படுத்தியுள்ளேன். பொறுமையிழந்து என்னுடைய சகாக்களோடு சண்டையிட்டிருக்கிறேன், இல்லத்தலைவியைப் பற்றி முணுமுணுத்து அவளை சபித்திருக்கிறேன். இவை எல்லாவற்றிற்காகவும் நான் வருந்துகிறேன். கிருபைக்காக வேண்டுகிறேன். இனிமேல் அதிக சிறப்புடன் செயல்பட விரும்புகிறேன்.
இல்லத்தலைவன் அல்லது இல்லத்தலைவி கூறுவது:
குறிப்;பாக நான் என்னுடைய குடும்பம் – எனது மனைவி, குழந்தைகளையும், பணியாளர்களையும் தேவனின் நாமம் மகிமைப்படும்படியாக உண்மைத்துவமாக அறிவூட்டவோ, பயிற்சியளித்து வழிநடத்தாமலும் இருக்கிறேனென்று உமக்கு முன்னால் அறிக்கையிடுகிறேன். நான் சாபமிட்டிருக்கிறேன், நான் தேவனுடைய நாமத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறேன். என்னுடைய இழிவான வார்த்தைகளாலும் செயல்களாலும் ஒரு கீழ்த்தரமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறேன், நான் என்னுடைய அயலானை புண்படுத்தியும் அவனைப்பற்றி தீமையாயும் பேசியிருக்கிறேன். நான் தவறான நிறைகளையும் அளவீடுகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். நான் அயலானுக்குப் பொருட்களை ஏமாற்றி விற்றுள்ளேன்.
தேவனின் கட்டளைக்கும் தன் தகுதிக்கும் விரோதமாக வேறெந்த செயல்களை செய்திருந்தாலும் பாவத்திற்காக வருந்துகிறவர் அறிக்கையிட வேண்டும்.
ஆயினும் ஒருவன் இவைகளால் அல்லது இவற்றைவிட கனமான பாவங்களை சுமந்திருப்பதை உணராதிருந்தால் அவன் அதைக் குறித்து எண்ணமுள்ளவனாகவோ அல்லது வேறு பாவங்களை ஆராய்ந்து தேடுகிறதில்லையெனில், பாவஅறிக்கையானது சித்ரவதையை உண்டு பண்ணினாலும், அவனுக்குத் தெரிந்த ஒன்று அல்லது இரண்டு பாவங்களை குறிப்பிட வேண்டும். அதாவது: குறிப்பாக நான் ஒரு தடவை தேவனுடைய நாமத்தை துஷ்பிரயோகப்படுத்தி உள்ளேன்; மீண்டும், நான் ஒரு முறை தகாத வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறேன், நான் ஒரு முறை இதை அல்லது அதைப் புறக்கணித்திருக்கிறேன் என இவ்வாறு அறிக்கையிட்டால் போதும். இவ்வழியில் ஆன்மாவை சமாதானத்திற்கு வழிநடத்த வேண்டும்.
ஆனால் உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையானால் (இது அரிதாக காணப்படுகிறது), குறிப்பாக எதையும் தெரிவிக்க வேண்டாம். ஆனால்இ பாவமன்னிப்பு வழங்கும் குருவுக்கு முன்னால் தேவனிடம் செய்கிற பொதுவான பாவ அறிக்கையின் பேரில் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு மன்னிப்பு வழங்கும் குரு கூறுவதாவது:
தேவன் உனக்கு இரங்கி உன்னுடைய விசுவாசத்தை பலப்படுத்துவாராக. ஆமென்.
அவர் பாவஅறிக்கை செய்பவரிடம் இவ்வாறு கேட்க வேண்டும்:
நான் கொடுக்கும் பாவ மன்னிப்பு தேவன் வழங்கும் பாவ மன்னிப்பாய் இருக்கிறது என்று விசுவாசிக்கிறாயா?
விடை:
ஆம், குருவே.
பின், ஏற்றுக்கொள்ளும் விசுவாசியிடம் அவர் கூற வேண்டியது:
நீ விசுவாசிக்கிறபடியே உனக்கு ஆகக்கடவது. நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைப்படி நான் உன்னுடைய பாவங்களை பிதா குமாரன் பரிசுத்த ஆவியினால் மன்னிக்கிறேன். ஆமென். சமாதானத்தோடு செல்வாயாக.
வேதப்பகுதிகளுக்கூடாக மிகவும் பாதிக்கப்பட்ட மனச்சாட்சி, சோதனைகள் அல்லது நம்பிக்கையின்மை போன்றவற்றால் துயருறுபவர்களின் விசுவாசத்தை அதிகரிக்கும் வகையில் பலப்படுத்தி அவர்களை எவ்வாறு தேற்றுவதென்பதைக் குறித்து குருவானவர் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அவர்களின் விசுவாசத்தை பலப்படுத்தவும் பாவ மன்னிப்பு அளிக்கும் குரு கூடுதலான வேதப்பகுதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். இது கல்வி அறிவற்ற சாதாரண மக்களுக்கேற்றவாறு குழந்தைத்தனமாக அமைக்கப்பட்ட பாவஅறிக்கையின் பொதுவான வடிவமாகும்.