திருமுழுக்கு திரு வருட்சாதனம் (சாக்கிரமெந்து)
குடும்பத்தலைவர் இவற்றை எளிய முறையில் தன் வீட்டாருக்கு எவ்விதம் கற்பிக்க வேண்டும்.
முதலாவது
ஞானஸ்நானம் என்றால் என்ன?
விடை:
ஞானஸ்நானம் வெறும் தண்ணீரல்ல, அது தேவனின் கட்டளையைப் புரிந்து கொள்வதற்காகவும் தேவனின் வார்த்தையோடு இணைந்ததுமாய் இருக்கிறது.
தேவனின் வார்த்தை என்ன?
விடை:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு சுவிசேஷத்தில் (28:19) கூறுகிறதாவது:
‘ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்”.
இரண்டாவது
ஞானஸ்நானம் என்ன நன்மைகளை அளிக்கிறது?
விடை:
அது பாவமன்னிப்பை செயல்படுத்துகிறது. மரணத்தினின்றும் பிசாசிடமிருந்தும் தப்புவிக்கிறது. தேவனுடைய வார்த்தைகளும் வாக்குத்தத்தங்களும் அறிவிப்பது போல் இதை நம்புகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பை அளிக்கிறது.
தேவனுடைய அந்த வார்த்தைகளும் வாக்குறுதிகளும் யாவை?
விடை:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாற்கு சுவிசேஷத்தில் (16:16) கூறுகிறதாவது:
‘விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.”
மூன்றாவது
தண்ணீரால் எப்படி இவ்வளவு பெரிய காரியங்களை செய்ய முடிகிறது?
விடை:
நிச்சயமாக வெறும் தண்ணீர் மட்டும் இவற்றை செய்கிறதில்லை, ஆனால் தேவனின் வார்த்தை தன்ணீரிலும் இருக்கிறது. இத்தண்ணீரில் உள்ள தேவனின் வார்த்தையை நம்புகிற விசுவாசம் இந்தக் காரியங்களைச் செய்கிறது. ஏனெனில் தேவனின் வார்த்தை இல்லையெனில் அது வெறும் தண்ணீராய் இருக்கிறது. அது ஞானஸ்நானம் அல்ல. ஆனால் கடவுளின் வார்த்தையோடு அது ஞானஸ்நானமாக இருக்கிறது. அது ஜீவனையும் பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலையும் கொடுப்பதாகவுள்ளதாக புனித பவுல் அடிகளார் தீத்து 3:5-8இல் கூறுகிறார்:
‘நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே மறுஜென்ம முழுக்கினாலும் பரிசுத்தாவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.”
நான்காவது
தண்ணீரோடு கூடிய இத்தகைய ஞானஸ்நானம் எதைக் குறிக்கிறது?
விடை:
நம்மில் உள்ள பழைய ஆதாம் ஒவ்வொரு நாளும் உண்டாகும் பாவ உறுத்தலினாலும், மனந்திரும்புதலினாலும், எல்லா பாவங்களோடும், தீங்கான ஆசைகளோடும் மூழ்கி மரிப்பதுடன் தேவன் முன்னிலையில் என்றென்றும் நீதியோடும் தூய்மையோடும் வாழ்வதற்கு மறுபடியும் புதிய மனிதன் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டெழுகின்ற வண்ணமாக இருக்க வேண்டும்.
இது வேதத்தில் எங்கே எழுதப்பட்டிருக்கிது?
விடை:
புனித பவுல் ரோம நிருபத்தில் கூறுகிறதாவது (6:4):
‘மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம்”.