ஆண்டவருடைய ஜெபம்
குடும்பத்தலைவர் இவற்றை எளிய முறையில் தன் வீட்டாருக்கு எவ்விதம் கற்பிக்க வேண்டும்.
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே.
இதன் பொருள் என்ன?
விடை:
இச்சிறிய அறிமுகத்தினூடாக அவர் நம்முடைய மெய்யான பிதாவெனவும் நாம் அவருடைய மெய்யான பிள்ளைகளென்றும் விசுவாசிக்கும்படி நம்மைக் கனிவாக அழைக்கிறார். ஆகையால், அன்பான பிள்ளைகள் தேவைக்காக பெற்றோரிடம் நம்பிக்கையுடன் வினவுவதைப்போல், நாமும் முழுமையான உறுதியான நம்பிக்கையுடன் அழைக்கலாம்.
முதலாம் மன்றாட்டு
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
இதன் பொருள் என்ன?
விடை:
தேவனின் நாமம் நிச்சயமாக தன்னில்தானே பரிசுத்தமானது, ஆனால் இது நம்மிடையேயும் பரிசுத்தமாக நிலைத்திருக்க வேண்டுமென இம்மன்றாட்டில் ஜெபிக்கிறோம்.
இதை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?
விடை:
தேவனது வார்த்தை உண்மையாகவும், தூய்மையாகவும் கற்பிக்கப்படும்போதும், தேவனின் பிள்ளைகளாகிய நாம், அவ்வார்த்தையின்படியே தூயவாழ்க்கை வாழ்கிறோம். பரத்திலிருக்கும் எங்கள் அன்பான பிதாவே, இதைச் செய்ய எங்களுக்கு உதவும்! ஆனால் யாரொருவர் கடவுளின் வார்த்தையின் கற்பித்தலுக்கு முரண்பாடாக போதிக்கிறாரோ அல்லது வாழ்கிறாரோ அவர், நம் மத்தியில் தேவனுடைய நாமத்தை நிந்திக்கிறவராக இருக்கிறார். தயையுள்ள பரம பிதாவே நாங்கள் இவற்றைச் செய்யாதபடிக்கு எங்களைப் பாதுகாத்தருளும்!
இரண்டாம் மன்றாட்டு
உம்முடைய இராஜ்யம் வருவதாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நமது மன்றாட்டு இல்லாமலேயே தேவனுடைய இராஜ்யம் வருகிறது. ஆனால், அது நமக்குள்ளேயும் வரவேண்டுமென்று இந்த மன்றாட்டில் ஜெபிக்கின்றோம்.
இதை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?
விடை:
நாம் தேவனுடைய தூய வார்த்தையிலே நம்பிக்கை கொண்டு, இங்கே நம் உலக வாழ்விலும் அங்கே நித்திய வாழ்விலும் கடவுள் பற்றுடைய வாழ்க்கையை நாம் வாழத்தக்கதாக பரமபிதாவுடைய கிருபையினாலே அவர் நமக்கு பரிசுத்தாவியை அருளுகிறார்.
மூன்றாம் மன்றாட்டு
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நன்மையும் கிருபையுமான தேவனின் சித்தம் நாம் மன்றாடாமலே செய்யப்படுகிறது. ஆனால் அது நம்மிலேயும் செய்யப்பட வேண்டும் என்று இந்த மன்றாட்டிலே ஜெபிக்கிறோம்.
இதை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?
விடை:
தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளவும், தேவனுடைய இராஜ்யம் நம்மிடம் வருவதைத் தடுக்கவும் நம்மைத் தூண்டிவிடும் பிசாசின் திட்டம், உலகம், நம்முடைய மாம்சம் ஆகியவற்றைத் தடை செய்து உடைக்கிறார். அதன்பின் எமது வாழ்வின் முடிவுப்பரியந்தம் வரை அவரது வார்த்தையிலும் விசுவாசத்திலும் உறுதியாக நிலைத்திருக்க பலப்படுத்துகிறார். இதுவே அவருடைய நன்மையும் கிருபையும் உள்ள சித்தமாகும்.
நான்காம் மன்றாட்டு
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
இதன் பொருள் என்ன?
விடை:
தேவன் தீயவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நம்முடைய மன்றாட்டு இல்லாமலே அன்றன்று வேண்டிய உணவை நிச்சயமாக அளித்து வருகிறார். ஆனால் நன்றியுடன் பெற்றுக்கொள்ளும் அன்றன்றைய ஆகாரத்திற்கான ஆசீர்வாதத்தினை ஒப்புக்கொள்கிறதற்காகவும் இம்மன்றாட்டினூடாக ஜெபிக்கிறோம்.
ஆகாரம் என்பதின் பொருள் என்ன?
விடை:
ஆகாரம் என்பதற்குள் நமது உடலுக்கு ஆதாரமாகவும் தேவையுமாயிருக்கிறவைகள் அடங்கும். உணவு, தண்ணீர், உடை, காலணிகள், வீடு வாசல், துறைகள், கால்நடைகள், பணம், செல்வம், சிறந்த கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள், நேர்மையான வேலைக்காரர், உண்மையுள்ள அதிகாரிகள், நிலையான அரசு, நல்ல காலநிலை, சமாதானம், உடல் நலம், ஒழுக்கம், நற்புகழ், சிறந்த நண்பர்கள், நம்பிக்கைக்குரிய அயலகத்தார், மற்றும் இதைப் போன்ற அனைத்தும் அடங்கும்.
ஐந்தாம் மன்றாட்டு
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
இதன் பொருள் என்ன?
விடை:
பரலோகத்திலுள்ள நம் பிதா நமது பாவங்களைப் பாராமலும் அவைகளின் நிமித்தம் நமது விண்ணப்பங்களை மறுக்காமலும் எல்லாவற்றையும் கிருபையாய் கொடுத்தருள வேண்டுமென்று இந்த மன்றாட்டிலே மன்றாடுகிறோம். ஏனென்றால், கேட்கிறவைகளை பெற்றுக்கொள்ள நமக்குத் தகுதியுமில்லை, அவற்றை நாம் சம்பாதித்துக் கொள்ளவுமியலாது. இருப்பினும் அவரது கிருபையினாலும், நன்மையினாலும் நாம் கேட்பதைத் தருவதற்கு அவர் தயாராகவே இருக்கிறார். நாள்தோறும் மிகுதியாய் பாவம் செய்து தண்டனைக்கு மாத்திரமே ஏற்றவர்களாய் இருக்கிறோம். ஆகவே நமக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவர்களுக்கு உண்மையாய் மன்னித்து மகிழ்ச்சியோடு நன்மை செய்வோம்.
ஆறாம் மன்றாட்டு
எங்களைச் சோதனைக்குட்;படப் பண்ணாதிரும்.
இதன் பொருள் என்ன?
விடை:
தேவன் நிச்சயமாக ஒருவரையும் சோதிப்பதில்லை. ஆனால், பிசாசு, உலகம், மற்றும் நம்முடைய மாம்சம் நம்மை வஞ்சிக்காமலும், மெய்யான நம்பிக்கையை விட்டு விலகி நம்மை ஏமாற்றி மூடநம்பிக்கைகளுக்கும், அவநம்பிக்கைக்கும், விரக்திக்கும், மற்றும் பாரிய குற்றங்கள், தீமைகள் போன்றவற்றிலிருந்து தேவன் நம்மை பாதுகாக்குமாறு இம்மன்றாட்டில் ஜெபியுங்கள். இது போன்ற சோதனைகளால் துன்புறுத்தப்படுகையில் நாம் வீழ்ந்து தோற்று விடக்கூடாது. மாறாக இவற்றிலிருந்து மீண்டு எழுந்து அவற்றை வென்று ஜெயம் எடுக்க வேண்டும்.
ஏழாம் மன்றாட்டு
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.
இதன் பொருள் என்ன?
விடை:
இந்த மன்றாட்டில் அனைத்தினதும் சுருக்கமாக, பரலோகத்திலிருக்கிற நம் பிதா நமது உடலுக்கும்இ ஆன்மாவுக்கும் உடைமைகளுக்கும், புகழுக்கும் ஏற்படுகிற ஒவ்வொரு தீமை மற்றும் ஆபத்திலிருந்து நம்மை மீட்க வேண்டும் என்றும், மரணத்தின் வேளை வரும்போது ஆசீர்வாதமான முடிவினை நமக்கு அளித்து, அவருடைய கிருபையுள்ள நன்மைகளினால் கண்ணீர் எனும் பள்ளத்தாக்கிலிருந்து மீட்டு பரலோகத்தில் தம்முடன் இணைத்துக்கொள்ளுமாறு ஜெபிக்கிறோம்.
என்றென்றும் எப்போதும் உன்னதமான இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் உம்முடையவைகளாகும்.
ஆமென்.
இதன் பொருள் என்ன?
விடை:
ஆமென் என்பதற்கு இந்த மன்றாட்டுகளை பரலோகத்திலிருக்கிற பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதென்றும் அவரால் கேட்கப்படுகின்றன என்றும் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதைப் பொருள்படுத்துகிறது. இவ்வாறு நாம் ஜெபிக்க வேண்டுமென அவரே கட்;டளையிட்டு அவைகளை அவர் கேட்பாரென்றும் வாக்களித்திருக்கிறார். ஆமென் ஆமென் என்றால்: ‘ஆம் ஆம், அப்படியே ஆகுக” என்பது பொருள்.