பத்துக்கட்டளைகள்
குடும்பத்தலைவர் இவற்றை எளிய முறையில் தன் வீட்டாருக்கு எவ்விதம் கற்பிக்க வேண்டும்.
முதலாம் கட்டளை:
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம், நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுக்குப் பயந்து, அவரிடம் அன்பு கூர்ந்து, அவரில் நம்பிக்கையாயிருக்க வேண்டும்.
இரண்டாம் கட்டளை:
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக அவர் பெயரால் சபிக்காமலும், ஆணையிடாமலும், மாந்திரீகம் மேற்கொள்ளாமலும், பொய் கூறாமலும், அவர் நாமத்தினால் ஏமாற்றாமலும், மாறாக அனைத்துத் தேவைகளின்போதும் அவரை அழைத்து ஜெபித்து, அவரைத் துதித்து, நன்றிகளைச் செலுத்த வேண்டும்.
மூன்றாம் கட்டளை:
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக பிரசங்கத்தையும், அவருடைய தேவவார்த்தையையும் நிந்திக்காமல் அதைப் பரிசுத்தமாய் எண்ணி, மகிழ்ச்சியோடு கேட்டு கற்றுக்கொள்ள வேண்டும்.
நான்காம் கட்டளை:
உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக நம் பெற்றோரையும், பெரியவர்களையும் நிந்திக்காமலும், கோபப்படுத்தாமலும், அவர்களுக்கு அன்பு கூர்ந்து, மரியாதை செலுத்தி, கீழ்ப்படிந்து, சேவை செய்து உயர் ஸ்தானத்தில் அரவணைத்துக் கொள்ளல் வேண்டும்.
ஐந்தாம் கட்டளை:
கொலை செய்யாதிருப்பாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக நாம் அடுத்தவரின் உடலுக்கு சேதமும் தீங்கும் செய்யாமல் அதற்கு மாறாக, நட்புடன் உதவி செய்து, அவரது சரீரம் மற்றும் வாழ்வின் அனைத்துத் சோதனைகளிலும் தேவைகளிலும் தாங்கி வர வேண்டும்.
ஆறாம் கட்டளை:
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக சொல்லாலும் செயலாலும் பரிசுத்தமாகவும் ஒழுக்கமாகவும் வாழ்வதுடன், தம்பதியர் ஒருவரையொருவர் நேசித்து மதித்து நடத்தல் வேண்டும்.
ஏழாம் கட்டளை:
களவு செய்யாதிருப்பாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக அடுத்தவரின் பணத்தையோ, சொத்துக்களையோ எடுத்துக்கொள்ளாமலும் அல்லது மோசடியான ஒப்பந்தங்கள், ஏமாற்றும் வழிகளினூடாக அவற்றைப் பெற்றுக்கொள்ளாமலும், மாறாக, அவருடைய உடைமைகளும் வியாபாரமும் வளர்ந்து பெருகும்படி உதவி செய்து, அவரது செல்வத்தைப் பாதுகாத்து, அவரது நிலையை சிறப்பாக்கிடுங்கள்.
எட்டாம் கட்டளை:
அயலானுக்கு விரோதமாய் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக அயலானைக் குறித்துத் தவறான நிலைப்பாடு, வேண்டுமென்றே பொய் கூறாமலும், காட்டிக்கொடுக்காமலும்,அவதூறு கூறாமலும் அல்லது அவர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தாமலும் அவரைப் பாதுகாத்து, அவரைக் குறித்து நன்மையாக சிந்தித்துப் பேசி எல்லாவற்றையும் சிறப்பான வழிகளில் விளக்கிக் காணிபிக்க வேண்டும்.
ஒன்பதாம் கட்டளை:
அயலான் வீட்டை இச்சியாதிருப்பாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக அயலானுடைய வீட்டையும் பரம்பரைச் சொத்துக்களையும் அடைகிறதற்கு தந்திர முறைகளைப் பின்பற்றாமலும், சட்ட உரிமைகள், நீதியென பாசாங்கு செய்து அவைகளை அபகரித்துக் கொள்ளாமலும், மாறாக, அவைகள் குறையாது நிலைத்து நிற்க அவருக்கு சகாயமும் உபகாரமும் செய்ய வேண்டும்.
பத்தாம் கட்டளை:
அயலானின் மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், அயலானுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
இதன் பொருள் என்ன?
விடை:
நாம் தேவனுக்குப் பயந்து அவரிடம் அன்பு கூருவதின் பயனாக அடுத்தவருடைய மனைவி, வேலைக்காரரை விரோதமாக மாற்றல், வசீகரித்தல் அல்லது கடத்தல், அல்லது மிருகங்களை அவரிடமிருந்து விலக்கி வைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளாது, மாறாக, அவரவர் கடமைகளை அக்கறையுடன் மேற்கொண்டு அவருடனே நிலைத்திருக்கச் செய்ய ஊக்குவித்தல் வேண்டும்.
கட்டளைகளின் முடிவுரை:
இவ்வனைத்துக் கட்டளைகளையும் குறித்துக் தேவன் என்ன கூறுகிறார்?
விடை:
யாத்ராகமம் 20:5-6 இல் அவர் இவ்வாறு கூறுகிறார்:
உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். ஆனால், என்னிடத்தில் உறுதியாக அன்பு கூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
இதன் பொருள் என்ன?
விடை:
தேவன் தாம் அருளிச்செய்த இந்த பத்து கட்டளைகளை மீறி நடக்கிற எல்லோரையும் தண்டிப்பேனென்று எச்சரிக்கிறார். ஆகையால் நாம் அவருடைய கோபத்திற்குப் பயந்து இந்தக் கட்டளைகளுக்கு எதிராக நடக்காமலிருக்கக் கடவோம். ஆனால் இந்தக் கட்டளைகளை கைக்கொள்ளும் அனைவருக்கும் அவர் கிருபையும் சகல ஆசியையும் செய்வேனென்று உறுதி கூறுகிறார். ஆகையால் நாம் அவரிடம் அன்புகூர்ந்து, நம்பிக்கையாயிருப்பதுடன் ஆர்வத்துடனும், விடாமுயற்சியுடனும் நமது முழுவாழ்க்கையையும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போமாக.