371. வாரும் நாம் எல்லோரும் கூடி

நாம் கூடி மகிழ் கொண்டாடுவோம்

பல்லவி

வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்;-சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ!

சரணங்கள்

1. தாரகம்[1] அற்ற ஏழைகள் தழைக்க நாயனா,-இந்தத்
தாரணி யிலே[2] மனுடவ தாரம் ஆயினார். - வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம்,-அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார். - வாரும்

3. ஞாலமதில்[3] அவர்க்கிணை[4] நண்பர் யாருளர்,-பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார். - வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே,-இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ்[5] சென்றார். - வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே,-அவர்
பட்சம் வைத் துறும் தொழும்பரை[6] ரட்சை செய்கிறார். - வாரும்


ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஏகதாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்

[1] ஆதரவு
[2] பூமியிலே
[3] உலகத்தில்
[4] ஒப்பு
[5] விண்தலம்
[6] அடியாரை