347. மறவாதே மனமே தேவ சுதனை

தேவ சுதனை மறவாதே

பல்லவி

மறவாதே, மனமே,-தேவ சுதனை
மறவாதே, மனமே,-ஒருபொழுதும்

சரணங்கள்

1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே

2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானு வேலை - மறவாதே

3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை - மறவாதே

4. நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் - மறவாதே

5. நித்தம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை - மறவாதே

6. வருடம், வருடம் தோறும் மாறாத் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை - மறவாதே


ராகம்: காம்போதி
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்