பல்வேறு கிறிஸ்தவ சமயப்பணி மற்றும் பதவிகளில் உள்ளவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களைப் பற்றி அறிவுறுத்தும் சில வேதப்பகுதிகள்.
பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பிரசங்கிமார்களுக்கு
‘திருச்சபையின் தலைவனாக இருக்க வேண்டியவன் கட்டாயமாக குற்றம் காணப்படாதவனாயும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாயும், தெளிந்த புத்தியுள்ளவனாயும், சுயகட்டுப்பாடுள்ளவனாயும், மதிப்புக்குரியவனாயும், உபசரிக்கும் பண்பு உடையவனாயும், கற்பிக்கும் ஆற்றல் உடையவனாயும் இருக்க வேண்டும், அவன் மதுபானவெறி கொள்ளும் பழக்கம் இல்லாதவனாய் இருக்க வேண்டும், கலகக்காரனாக இராமல், கனிவு உடையவனாய் இருக்க வேண்டும், அவன் வாக்குவாதம் செய்யாதவனாயும், பணத்தில் ஆசை கொள்ளாதவனுமாய் இருக்க வேண்டும், அவன் தனது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும், அவனது பிள்ளைகள் அவனுக்கு மதிப்புக் கொடுத்து, கீழ்ப்படியும்படி பார்த்துக் கொள்ளவும் வேண்டும்; புதிதாக மனமாற்றம் அடைந்த கிறிஸ்தவனாய் இருக்கக்கூடாது, அவன் திருச்சபையைச் சேராதவர்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாயிருக்க வேண்டும்.’ (1 தீமோ 3:1-7)
‘திருச்சபைக்கு பொறுப்பாய் இருக்கும் ஊழியன், இறைவனின் உக்கிராணக்காரனாக இருப்பதால், அவன் குற்றம் காணப்படாதவனாய் இருக்க வேண்டும், அவன் கர்வம் பிடித்தவனாகவோ, முற்கோபம் உள்ளவனாகவோ, மதுபான வெறிக்கு அடிமையானவனாகவோ இருக்கக்கூடாது, அவன் வன்முறையில் ஈடுபடுகிறவனாகவோ, நேர்மையற்ற முறையில் இலாபம் ஈட்டுகிறவனாகவோ இருக்கக்கூடாது, அவன் மற்றவர்களை உபசரிக்கிறவனாகவும், நன்மையை நேசிக்கிறவனாகவும், தன்னடக்கம் உடையவனாகவும், நேர்மையானவனாகவும் இருக்க வேண்டும், அவன் பரிசுத்தம் உள்ளவனாயும், ஒழுக்கமுடையவனாயும் இருக்க வேண்டும், தனக்குக் கற்பித்துக் கொடுக்கப்பட்ட நம்பத்தக்க இந்த செய்தியை உறுதியாய் நம்பியிருக்க வேண்டும், அப்பொழுதோ அவன் நலமான கோட்பாட்டினால் மற்றவர்களை உற்சாகப்படுத்துவான், அதற்கு முரண்பாடாய் இருக்கிறவர்களையும் எதிர்த்துச் சரியானதை எடுத்துச் சொல்வான்.’ (தீத்து 1:7-9).
வசனத்தை கேட்கிறவர்கள் தங்கள் ஆயர்களுக்கு செய்ய வேண்டியவை
‘அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள், நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்’ (1 கொரி. 9:14)
‘இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கிறவர்கள், தங்களுக்கு அதைக் கற்றுக்கொடுக்கிறவர்களுடன், தங்களிடமுள்ள எல்லா நன்மைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’. (கலா. 6:6)
‘திருச்சபையை நன்றாய் நடத்தும் மூப்பர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேடமாக பிரசங்கம் பண்ணுவதிலும், கற்பிப்பதிலும் ஈடுபடும் மூப்பர்களை அப்படி எண்ண வேண்டும், ஏனெனில், “சூடு (தானியத்தை) மிதிக்கும்போது மாட்டின் வாயைக் கட்டாதே” என்றும், “வேலை செய்பவன் தன் கூலியைப் பெற உரிமையுள்ளவன்” என்றும் வேசவசனம் சொல்லுகிறதே.’ (1 தீமோ 5:17-18)
‘உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களுடைய அதிகாரத்திற்குப் பணிந்து நடவுங்கள். அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக, உங்கள்மேல் (ஆன்மா) கண்காணிப்பு செய்கிறார்கள். அவர்களது வேலை அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது ஒரு சுமையாய் (துக்கமாய்) இருக்காது. அவர்களுக்கு அது ஒரு சுமையாயிருந்தால் (துக்கமாயிருந்தால்) உங்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. எங்களுக்காக மன்றாடுங்கள்.’ (எபி. 13:17-18)
குடியரசு தொடர்பில்
‘அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஒவ்வொருவரும் அடங்கி நடவுங்கள். ஏனெனில் இறைவன் அனுமதிக்காமல் எந்த அதிகாரமும் இருப்பதில்லை. இப்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கிற அதிகார பீடங்கள் இறைவனாலேயே நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால் அதிகாரத்தை எதிர்த்துக் கலகம் விளைவிக்கிறவன், இறைவன் நியமித்ததையே எதிர்த்துக் கலகம் விளைவிக்கிறான். அவ்விதம் கலகம் விளைவிக்கிறவர்கள் தங்கள் மேலேயே தண்டனையை விளைவித்துக் கொள்கிறார்கள். ஏனெனில், சரியானதைச் செய்கிறவர்கள் ஆளுகை செய்கிறவர்களைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. தீமை செய்கிறவர்களே பயப்பட வேண்டும். அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சரியானதைச் செய்யுங்கள். அப்பொழுது அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள் (அங்கீகரிப்பர்). ஏனெனில் அவர்கள் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்யும்படி, இறைவனுடைய பணியாளர்களாயிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் பிழை செய்தால், அவர்களுக்குப் பயப்படவே வேண்டும். அவர்கள் வாளை வீணாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய பணியாட்கள், தீமை செய்கிறவர்களுக்குத் தண்டனை கொடுத்து, இறைவனுடைய உக்கிர கோபத்தை காண்பிக்கும் பிரதிநிதிகள்.’ (ரோமர் 13:1-4)
குடிமக்கள் அதிகாரிகளுக்கு செய்ய வேண்டியவை
‘சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்’ (மத். 22:21)
‘ஆகையால் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பதே அவசியம். தண்டனை கிடைக்குமே என்பதற்காக மட்டும் அல்ல, நம்முடைய மனசாட்சியின் நிமித்தமும் அப்படியே நடக்க வேண்டும். அதற்காகத்தான் நீங்கள் வரிகளையும் செலுத்துகிறீர்கள். ஏனெனில் அதிகாரத்தில் உள்ளவர்கள் இறைவனுடைய பணியாட்கள். அவர்கள் ஆளுகை செய்யும் பணியில் தங்களது முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள். நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் வரி செலுத்த வேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள்;; சுங்கவரி செலுத்த வேண்டுமானால் அதைச் செலுத்துங்கள்; மரியாதை செலுத்த வேண்டுமானால் மரியாதை செலுத்துங்கள். கனம் பண்ண வேண்டுமானால் கனம் பண்ணுங்கள்.’ (ரோமர் 13:5-7)
‘எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொருவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்; மன்றாடுங்கள்; பரிந்து வேண்டுதல் செய்யுங்கள்; நன்றி செலுத்துங்கள். நான் இதையே உங்களிடம் முதலாவதாக வற்புறுத்திக் கேட்கிறேன். அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள எல்லோருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறைபக்தியும், பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும், அமைதியும் உள்ள வாழ்வை வாழலாம்.’ (1 தீமோ 2:1-2).
‘ஆளுகை செய்கிறவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பணிந்திருக்கும்படி மக்களுக்கு ஞாபகப்படுத்து. அவர்களுக்கு கீழ்ப்படியவும், எல்லா நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயும், ஒருவரையும் அவதூறாய் பேசாதவர்களாயும், எல்லோருடனும் சமாதானமாய் வாழ்கிறவர்களாயும், கரிசனை உடையவர்களாயும், எல்லா மனிதருக்கும் உண்மையான தாழ்மையைக் காட்டுகிறவர்களாயும் இருக்க வேண்டும் என்றும் ஞாபகப்படுத்து.’ (தீத்து 3:1-2)
‘கர்த்தரின் நிமித்தம் மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிற எல்லா அதிகாரங்களுக்கும் பணிந்து நடவுங்கள்: மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, அல்லது தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கும்படியும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டும்படியும் அரசனால் அனுபப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். இது இறைவனுடைய திட்டமாய் இருக்கிறது.’ (1பேது.2:13-15)
கணவர்களுக்கு
‘கணவர்களே! அதுபோலவே உங்கள் மனைவியருடன் சரியான புரிந்துணர்வோடு அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும், இறைவனின் மகிமையின் கொடையான வாழ்வை, உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால் அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுக்களுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.’ (1 பேது. 3:7)
‘கணவர்களே! உங்கள் மனைவிகளில் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதிருங்கள்.’ (கொலோ. 3:19)
மனைவிகளுக்கு
‘மனைவிகளே! நீங்கள் கர்த்தருக்குப் பணிந்து நடப்பதுபோல, உங்கள் கணவர்களுக்கும் பணிந்து நடவுங்கள்.’ (எபே. 5:22)
‘மனைவிகளே! அவ்வாறே நீங்களும் உங்கள் கணவர்களுக்கு பணிந்து அவர்களுடன் ஆலோசித்து நடவுங்கள். …. அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது ‘எசமான்’ என்று அழைத்து, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள்.’ (1 பேது. 3:1,6)
பெற்றோருக்கு
‘தந்தையரே! உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்; அவர்களைக் கர்த்தரின் பயிற்சியிலும் அறிவுறுத்தல்களிலும் வளர்த்தெடுங்கள்.’ (எபே. 6:4)
பிள்ளைகளுக்கு
‘பிள்ளைகளே! நீங்கள் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே சரியானது. “உங்கள் தகப்பனையும் தாயையும் மதித்து நடவுங்கள்”- இதுவே வாக்குத்தத்தத்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை- “இதைக் கைக்கொள்வதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும். நீங்களும் இந்தப் பூமியில் நீடித்து வாழ்வீர்கள்.” (எபே 6:1-3)
ஆண், பெண் ஊழியர்கள், பணியமர்த்தப்பட்ட ஆண்கள், தொழிலாளர்களுக்கு
‘அடிமைகளே! இந்தப் பூமியில் உங்களுக்கு எசமான்களாய் இருக்கிறவர்களுக்கு பயத்துடனும் மரியாதையுடனும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல, அவர்களுக்கு உண்மையான மனதுடன் கீழ்ப்படியுங்கள். அவர்களுடைய பாராட்டுதலை மட்டும் பெறுவதற்காக, அவர்கள் உங்களை கவனிக்கும்போது மட்டும் அப்படிக் கீழ்ப்படியாமல், உங்கள் முழு இருதயத்ததோடும் இறைவனுடைய திட்டத்தைச் செய்யும், கிறிஸ்துவின் அடிமைகளைப் போல கீழ்ப்படியுங்கள். நீங்கள் மனிதருக்கு பணி செய்கிறவர்களைப் போலல்லாது, கர்த்தருக்குப் பணி செய்கிறவர்களாக, முழு இருதயத்துடனும் உங்கள் பணியைச் செய்யுங்கள். ஏனெனில் ஒருவன் அடிமையாயினும் சுதந்திரமுடையவனாயினும் அவனவன் செய்கின்ற நன்மைக்குப் பதிலாக, கர்த்தர் ஒவ்வொருவனுக்கும் அதற்குரிய பலனைக் கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்.’(எபே. 6:5-8).
அந்தப்படியே கொலோ.3:22-24ஐ பார்க்கவும்
எசமான்கள், எசமாட்டிகள்
‘எசமான்களே! உங்கள் அடிமைகளை நீங்களும் அப்படியே நடத்துங்கள். அவர்களைப் பயமுறுத்த வேண்டாம். நீங்களும் உங்கள் அடிமைகளும் பரலோகத்திலுள்ள ஒரே எசமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.’ (எபே. 6:9)
‘எசமான்களே, உங்கள் அடிமைகளுக்கு சரியானதையும் நியாயமானதையும் கொடுங்கள். ஏனெனில் பரலோகத்தில் உங்களுக்கும் ஒரு எசமான் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.’ (கொலோ. 4:1)
வாலிபர்களுக்கு
‘இளைஞர்களே! அந்தப்படியே நீங்களும் முதியவர்களுக்கு அடங்கி நடவுங்கள். நீங்கள் எல்லோரும் மற்றவர்களுடன் பழகும்போது மனத்தாழ்மையுடன் நடவுங்கள். ஏனெனில், “இறைவன் பெருமை உள்ளவர்களை எதிர்க்கிறார். மனத்தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபையைக் கொடுக்கிறார்.” ஆகவே, இறைவனுடைய வல்லமையான கரத்தின் கீழே உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது ஏற்றவேளையில் அவர் உங்களை உயர்த்துவார்.’ (1 பேதுரு 5:5-6)
விதவைகளுக்கு
‘ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்தும், கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் தரித்திருக்கிறாள். ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடை பிணமே.’ (1 தீமோ. 5:5-6)
அனைவருக்கும் பொதுவானது
‘தன்னுடனொத்த மனிதனில் ஒருவன் அன்பு செலுத்தினால், அவன் நீதிச்சட்டத்தை நிறைவேற்றுகிறான்.’ (ரோமர் 13:8ஆ)
‘ஒவ்வொருவருக்காகவும் பரிந்து வேண்டுதல் செய்யுங்கள்.’ (1 தீமோ. 2:1-2)
லூத்தருடைய ஒவ்வொரு பாடத்தையும் கவனத்துடன் கற்றுணர்ந்து குடும்பத்தினர் அனைவரும் சிறந்த முறையில் மிளிர்ந்திட வேண்டும்.