393. வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு

வையகந்தன்னை நடுத்தீர்க்க

பல்லவி

வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க!

அனுபல்லவி

பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க,
பொற்பதிதனிற் பரன் சேயரைச் சேர்க்க.    - வைய

சரணங்கள்

1. வானங்கள் மடமடப்போ டொழிந்திடவே,
மாகிதலம்[1] அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே;
பானுவுன் மதி யுடு அனைத்தும் மங்கிடவே,
பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே.    - வைய

2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க,
முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க,
ஆக்கணமுயிருள்ளோர் மறு உருத்தரிக்க,
ஆண்டவர் வருகிறார், பக்தர்கள் களிக்க.    - வைய

3. யாவரின் சிந்தை செய்கையும் வெளிப்படற்-கு
இரண்டு புத்தகங்களுந் திறந்தவரவர்க்குப்
பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு.     - வைய

4. அடைக்கலன் யேசுவை அறிந்தவர் நாமம்,
அழிந்திடாதவர்களின் வாழ்வது க்ஷேமம்;
படைத்திடுவாயிந்தக் கணமுனை, ஷாமம்
பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம்.    - வைய


ராகம்: காபி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்:  ஞா. சாமுவேல்

[1] பூதலம்