341. மகிழ் மகிழ் மந்தையே

மகிழ் மகிழ் மந்தையே

பல்லவி

மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலூயா!

அனுபல்லவி

மகிழ், மகிழ்; பரன் மைந்தன் மகத்துவ பரமேறினார்;
திகழ் திருச்சேனை பாடும் அல்லேலூயா, இன்று. - மகிழ்

சரணங்கள்

1. வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலேறினார், அல்லேலூயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார்,
ஞானமுடன் பாடுங்கள், அல்லேலூயா, இன்று - மகிழ்

2. ஏசுபரன் நமக்கு இறையானார்; இது
எல்லாவர்க்குஞ் சந்தோஷம், அல்லேலூயா!
வாசம் நாம் செய்யத் தந்தை வளவில்[1] இடம்பிடித்த
நேசமுன்னத நேசம், அல்லேலூயா, இன்று - மகிழ்

3. தந்தை வலப்பாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலூயா!
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்;
மந்தையே, உந்தனுக்காய் அல்லேலூயா, இன்று - மகிழ்

4. மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர்,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலூயா!
பாழ்ஜெகம் நிலையல்ல, பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலூயா, இன்று - மகிழ்

5. பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலூயா!
ஏதெமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலூயா, இன்று - மகிழ்


ராகம்: பூரிகல்யாணி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்:  ஞா. சாமுவேல்

[1] வீட்டில்