காரணமேன் கோவே
தரு
சீயோன் 1 பொற்பு[1] மிகும் வானுலகும்
பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே
பொந்திப்பிலாத் தரண்மனையில்
வந்து நிற்கும் காரணமேன், கோவே?
கிறிஸ்து கற்பனை மீறிய பாவத்தால்
கடின நரகாக்கினைப் படாமல்-உன்னைக்
காப்பதற் கிங்கே ஞாய
தீர்ப்பில் உற்றோம், சீயோனின் மாதே.
சீயோன் 2 துய்ய திரு மேனி எல்லாம்
நொய்ய உழுத நிலம்போல ஆகி,-உன்
சோரி[2] சிந்த, வாரதினால்
நீர் அடிக்கப்பட்டதென்ன, கோவே?
கிறிஸ்து வையகத்தின் பாதகத்தால்
பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற,-இந்த
வாதை எல்லாம் பட்டிறக்க,
போத[3] மனம் சம்மதித்தோம், மாதே.
சீயோன் 3 செய்ய[4] கண்கள் உறச் சிவந்து,
திருக் கன்னங்கள் தடித்து, மிக வீங்கி,-முழுச்
சென்னியின் ரோமங்கள் எல்லாம்
வின்னமுற்றிங்[5] கிருப்பதென்ன, கோவே?
கிறிஸ்து மையிருளில் குருக்களுடை
மாளிகையில் படுத்தின பாடெல்லாம்-இங்கே
வன் கொலைஞரால் அடிக்க,
பங்கமுற்ற கோலம் இது, மாதே
ராகம்: நீலாம்புரி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1]. அழகு
[2]. இரத்தம்
[3]. பூரணமாய்
[4]. அழகான
[5]. சிதைவு