293. நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே

பல்லவி

நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.

அனுபல்லவி

வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் - நெஞ்சே

சரணங்கள்

1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,
மித்ரு[1] சத்ருவானாலும்,
மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்து
வீழ்ந்தாலும். - நெஞ்சே

2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்
கைவிட்டாலும் - நெஞ்சே

3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்,
பின்னபேதகம்[2] சொன்னாலும், பிசாசு 
வந்தணாப்பினாலும்[3] - நெஞ்சே

4. கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில் 
அலைமோதினாலும். - நெஞ்சே


ராகம்: புன்னாகவராளி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

[1] நேசன்
[2] தவறான குற்றச்சாட்டு
[3] வந்து ஏய்த்தாலும்