228. தருணம் இதில் அருள் செய்

தருணம் இதில் அருள் செய்

பல்லவி

தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது
தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன்

அனுபல்லவி

மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து,
வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. - தருணம்

சரணங்கள்

1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற
ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே,
பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப்[1]
பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர. - தருணம்

2. வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை, விருப்போடு நீர்
வாரும், எனைச்சேரும், என்ற சீரை அறிந்தே ஏழையேன்;
திருத்தமுடன் எனைக்காத்து, நற்கருத்தை அளித்திருத்த அருள்
செய்ய, நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன், ஐயனே. - தருணம்

 


ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்

[1] நினைத்து